காட்பாடியில், ரெயில்மோதி இறந்த 2 பெண்கள் அடையாளம் தெரிந்தது - காங்கேயநல்லூரை சேர்ந்த தாய்-மகள்

" alt="" aria-hidden="true" />

காட்பாடி,

 

காட்பாடி ரெயில் நிலையத்தின் அருகில் தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் 2 பெண்கள் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். 45 வயது மதிக்கத்தக்க பெண் தலை துண்டான நிலையிலும், 25 வயது மதிக்கத்தக்க பெண் கால் துண்டிக்கப்பட்ட நிலையிலும் பிணமாகக்கிடந்தனர்.


 


 

இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்பாடி ரெயில்வே போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் சென்று இறந்து கிடந்த பெண்களின் உடல்களை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் அருகில் ஒரு பை கிடந்தது.

 

அந்த பையில் காட்பாடியில் இருந்து அரக்கோணத்துக்கு செல்வதற்கான 2 ரெயில் டிக்கெட்டுகளும், அரக்கோணத்தில் இருந்து காட்பாடிக்கு வருவதற்கான 2 டிக்கெட்டுகளும் இருந்தன. ஆனால் இறந்துகிடந்த பெண்கள் யார் என்பது தெரியவில்லை.

 

இரண்டு உடல்களையும் பிரேதபரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்தநிலையில் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த இருவரும் யார் என்பது அடையாளம் தெரிந்தது. அவர்கள் காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்த உமா மற்றும் அவருடைய மகள் திவ்யா என்பதும் தெரியவந்தது.

 

ஆனால் அவர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தார்களா? அல்லது ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்களா என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.